Wednesday, January 18, 2006

என் குட்டித் தேவதைக்கு....

என் குட்டித் தேவதைக்கு....

நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே
இலகுவான இடத்தில் ஒளிந்து
"எப்படியடி தெரிந்தது?" நான் பிரமிக்கையில்,
பெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு...
வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,
"ஐயோ! தெரியலியே" தவிக்கையில்,
குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி
ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு...
பஞ்சுப் பொம்மையைத்
தூக்க முடியாமல் கீழே போட்டு
கைவலிப்பதாய் நடிக்கையில்,
தூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு...
இப்படி ஒன்றும் தெரியாதவளாய்
நான் நடிப்பதெல்லாம்
உன்னை எல்லாம் தெரிந்தவளாய்
ஆக்கத்தான் என் குட்டி தேவதையே!

நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்

சில முத்துக்கள்!

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!


> உனக்கு நானோ
எனக்கு நீயோ
சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம்
வா!


> தேவைதானா என்று
கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா?
குரங்கிலிருந்து மனிதன்
குதித்திருக்க முடியுமா?
தூரத்தை
நெருங்கியிருக்க முடியுமா?
நேரத்தை
சுருக்கியிருக்க முடியுமா?
தேவைதான்
முட்டைக்குள் இருக்கும்
உயிரை மூச்சு விட
வைக்கிறது


> அனுபவங்களின்
தொகுப்புத்தான் வாழ்க்கை
நம் வாழ்க்கைமுறை
தீர்மானிக்கப்பட்ட
அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த
அனுபவங்களை
ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது
துப்பியது
ஆகவே
தாத்தாக்களின்
நகல்களாகவே தமிழன்
தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை